Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

வாழ்வை மாற்றிய வால்வோ!


நம் நாட்டில், பஸ் போக்குவரத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது வால்வோ பஸ்கள்தான். காலம் காலமாக தடதடத்துக்கொண்டிருந்த பஸ் பயண அனுபவத்தை, வீட்டு வரவேற்பறையின் சோபாவில் அமர்ந்திருப்பதுபோல மாற்றிய வல்லமை, வால்வோவுக்கு மட்டுமே உண்டு.
என்னதான் ஏர் பஸ், செமி சிலிப்பர், பெர்த் என பாடி கட்டுமானத்தில் மட்டுமே பாய்ச்சல் காட்டி மயக்கினாலும், சில மாதங்களிலேயே கட்டுமானம் தளர்ந்து, தடதடக்கும் சத்தம் கேட்பதைத் தவிர்க்க முடியாமல் பயணித்து வந்தோதோம். ஆனால், வால்வோ பேருந்தில் அப்படி எதுவும் நிகழ்வது இல்லையே. ஏன்?

பெங்களூரு  அருகே ஹாஸ்கோட் என்ற இடத்தில் உள்ள வால்வோ பஸ் தொழிற்சாலைக்கு விசிட் அடித்தோம். நம் பிரம்மாண்ட கற்பனைக்கு ஆரம்பத்திலேயே ஆணி அடித்தனர். காரணம், கார் தொழிற்சாலை போல வரிசைகட்டி பிளாட்ஃபார்மில் பஸ்கள் அசெம்பிள் ஆகும் என எதிர்பார்த்தால், சாதாரண வொர்க் ஷாப் போலவேதான் இருந்தது. ஆனால், பிரம்மாண்ட வொர்க் ஷாப் என்று சொல்லலாம். பஸ்கள் உருவாவதை படிப்படியாக காண வேண்டுமென்றால், ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வருவதற்கு, ஒரு முழுநாள் தேவைப்படும். அவ்வளவு பெரிய வொர்க்ஷாப்பாக இருக்கிறது வால்வோ தொழிற்சாலை.
முதலில், பஸ் கட்டுமானம் செய்யத் தேவைப்படும் உலோக சட்டங்களை, தேவைக்கு ஏற்ப வளைக்கும் பகுதிக்குச் சென்றோம். வால்வோ பஸ், விமானம் போலவே ஒரு அலுமினிய பறவை. ஆம், பஸ்ஸின் பெரும்பான்மை பகுதிகள் அலுமினியத்தால் உருவாகின்றன. சதுர வடிவில் (பாக்ஸ் டைப்) உள்ள அலுமினிய சட்டங்கள் கொண்டுதான் விமானமே கட்டமைக்கப்படுகிறது. அந்த அலுமினிய சட்டங்களைத்தான் வளைத்துக்கொண்டிருந்தனர்.
பொதுவாக, கனரக வாகனங்கள் என்றாலே ஒரு பெரிய இரும்புச் சட்டம் (சேஸி); அதன் முன்பக்கம் இன்ஜின், கியர்பாக்ஸ்; சேஸியின் கீழே யுனிவர்ஸல் ஜாயின்ட் எனப்படும் நீளமான ராடு, பின் சக்கரங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வால்வோ, இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முறையில், பின்பக்கம் இன்ஜின் - கியர்பாக்ஸ். அப்படியே பின் சக்கரங்களை இணைக்கும் ஜாயின்ட். அவ்வளவுதான். பஸ்ஸின் முன்பக்கம் ஸ்டீயரிங், டேஷ்போர்டு போன்ற விஷயங்கள் மட்டுமே இருக்கும். வால்வோவின் சேஸி, இரு பகுதிகளாக இருக்கிறது. முன் - பின் வீல்களுக்கு நடுவே உள்ள பகுதியை லக்கேஜ் வைக்கும் இடமாக மாற்றியுள்ளனர். அதாவது, சேஸிக்கு மேலேயும், கீழேயும் எடை தாங்குவது போன்ற வடிவமைப்பு, இதன் ஸ்பெஷல் என்று சொல்லலாம்.
மற்றொரு பக்கம், பஸ்ஸின் பக்கவாட்டுப் பகுதிக்குத் தேவையான விஷயங்களை, ஒரு பெரிய இரும்புச் சட்டத்தில் பொருத்திக்கொண்டிருந்தனர். பஸ்ஸின் சேஸியில் பொருத்த வேண்டிய விஷயங்கள் முடிந்ததும், இந்த இரு பக்கமும் இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்ட பாகங்களை அப்படியே கொண்டுவந்து இணைக்கின்றனர். இன்னொரு முக்கியமான விஷயம்; வால்வோ பேருந்துகளில் போல்டு - நட்டு, ரிவிட் போன்றவற்றுக்கு அதிக இடம் இல்லை. ஏனென்றால், கனரக வாகனங்களில் பெரும்பங்கு வகிப்பவை இவை. அதற்குப் பதில், பேஸ்ட்டிங் முறைதான். அதாவது, ஒருவித சிறப்புப் பசை மூலம் அலுமினிய சட்டங்களையும் தகடுகளும் இணைக்கும் இடத்தில் இதைப் பயன்படுத்துகிறார்கள். ‘இப்படி ஒட்டியதை நீங்கள் பிரிக்க முடியாது. வெட்டிதான் எடுக்க வேண்டும்' என்கிறார்கள். போல்ட் - நட், ரிவிட் இருந்தால்தானே அதிர்வில் தளர்ந்து சத்தம் கேட்கும். இப்படி ஒட்டிவிட்டால் கப்சிப் என்று இருக்கும் என்கிறார்கள். இதுதான் வால்வோ பஸ் தடதடக்காமல் இருப்பதன் ரகசியம்.
பஸ்சின் பாகங்கள் முழுமையாக இணைக்கப்பட்டதும், பெயின்ட் ஷாப்புக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அது முடிந்த பிறகுதான் ஃப்ளோர், இன்டீரியர், இருக்கைகள் பொருத்தப்பட்டு பஸ் முழுமையடைகிறது. வால்வோ பஸ்கள் அறிமுகமானமானபோது, அதன் விலையைக் கண்டு மலைத்த பஸ் ஆப்ரேட்டர்கள், இன்று வால்வோ பேருந்தின் உரிமையாளர் என்பதில் பெருமிதம் கொள்கின்றனர். டவுன் பஸ் மற்றும் ஆம்னி பஸ் போக்குவரத்தில் இன்றைக்கு தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளது வால்வோ. இன்றைக்கு இந்தியாவின் 15 நகரங்களில் டவுன் பஸ்ஸாக வால்வோ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள தொழிற்சாலையில் இதுவரை சுமார் 5,000 பஸ்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கட்டுமானத் தரம், தொழில்நுட்பம் என பலவிதங்கள் அட்வான்ஸ் தொழில் நுட்பங்களைக் கொண்ட வால்வோ பஸ்களை இயக்க தனித் திறமையும், சிறந்த அனுபவமும் இருக்க வேண்டும்.
அதற்காகவே டிரைவர்களுக்கு பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்குகிறது வால்வோ. இதுவரை 25,000 டிரைவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இதற்காகவே தொழிற்சாலை வளாகத்தில் பயிற்சிப் பள்ளியும் நடத்துகிறது வால்வோ. தொழில்நுட்பம் சார்ந்து டிரைவரின் திறமையை மேம்படுத்தும் இந்த பயிற்சிக்கு, நாடு முழுவதும் இருந்து டிரைவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். 
வால்வோ பஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், வி.ஆர்.வி ஸ்ரீபிரசாத்திடம் பேசினோம்.
‘‘வால்வோ பேருந்துகள் எப்போதும் பாதுகாப்பு, தரம் சார்ந்த விஷயங்களில் சமரசம் செய்துகொள்வது இல்லை. காலத்துக்கு முந்தைய தொழில்நுட்பத்தை அளிப்பதில் நாங்கள் எப்போதும் முன்னிலை வகிக்கிறோம்.
எதிர்காலத்தில் வரவிருக்கும் இ-பஸ், ஹை-ப்ரிட், மாற்று எரிபொருள் என எல்லாவித தொழில்நுட்பத்தையும் எதிர்கொள்ளவும், போட்டி நிறுவனங்களை சமாளிக்கவும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்’ என்றார் ஸ்ரீபிரசாத்.

Followers

Comments Please...