Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

80-90களில் பிறந்தவர்கள் - ஒரு ஜாலி அலசல்!


90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றி மேலே எழுதியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் நிறைய எழுதலாம்.
உலகிலேயே மிக வேகமாக வயதாகுவது யாருக்குத் தெரியுமா? 90களில் பிறந்த ஜெனரேஷன் Y மக்களுக்குத்தான். உத்தேசமாக 1980 முதல் 1990 வரை பிறந்த இவர்கள்தான் மிக வேகமாக வயதாகுபவர்கள். இங்கு வயது என்பது உடலளவில் அல்ல. மனதளவிலும், தாங்கள் சந்திக்கும் அனுபவங்களையும் குறிக்கிறது.  90களில் பிறந்தவர்களுக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. சில
விஷயங்களில் இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், சில விஷயங்களில் கொடுத்து வைக்காதவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றிய ஒரு ஜாலி அலசல்.

90களில் பிறந்தவர்களும், கணினி & இணையமும்

90களில் பிறந்த இணையத்தையே இன்று இயக்குவது இந்த 90களில் பிறந்தவர்கள்தான்.
* ஏலியன் தலை போன்று இருந்த பழைய ஆப்பிள் ஐ மேக் கம்ப்யூட்டரின் மானிட்டரைப் பார்த்து, 'அதெல்லாம் பணக்காரன் வீட்டுல இருக்கரதுப்பா!' என்று வருந்தியவர்கள்.

* இன்று, அதே ஆப்பிள்-ன் ஐஃபோனில் 'டிஸ்ப்ளே சுமார்பா' என்று அலுத்துக்கொள்பவர்கள்.

* நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் கதையை, ஸ்டீவ் ஜாப்ஸ் கண்டுபிடித்த ஆப்பிள் என்ற கதையாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்போகிறவர்கள்.

* மைக்ரோசாஃப்ட் பெயின்ட்டில் பென்சில் டூல் மூலம் மவுஸால் தன்பெயரை கிறுக்கி, உலகின் முதல் டிஜிட்டல் கையெழுத்தைப் போட்ட வர்க்கத்தினர்.

* ஃபோட்டோஷாப்பில் ஹீரோவின் உடலுடன் தன் தலையை சுமாரான மார்ஃபிங்கில் வெட்டி ஒட்டி தன் 'அழகில்' மயங்கியவர்கள்.

* MS-DOS ஆபரேட்டிங் சிஸ்டமை பயன்படுத்தத் தெரிந்தவர்கள்.

* விண்டோஸ் 98ன் அருமையை உணர்ந்தவர்கள்.

* பக்கத்து வீட்டு அங்கிளின் ஹார்டு டிஸ்க்கை ஃபார்மட் செய்து விண்டோஸ் XP ஆபரேட்டிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்து கொடுத்து புளகாங்கிதம் அடைந்தவர்கள்.

* மைக்ரோசாஃப்ட் வேர்டு மென்பொருளில் தன் பெயரை WordArt மூலம் 3Dல் பார்த்து பெருமிதம் அடைந்தவர்கள்.

* அமெரிக்காவில் இருந்து வரும் மாமாவிடம் Palmtop இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட்டவர்கள். கம்ப்யூட்டர் பாடத்தில் உள்ள 'பேஸிக்ஸ் ஆஃப் கம்ப்யூட்டர்' பகுதியில் வரும் அரித்மெட்டிக் அண்டு லாஜிக்கல் யூனிட் (ALU) என்றால் என்ன என்று கேட்டு ஆசிரியர்களைத் திணறடித்தவர்கள். சுருக்கமாக சொன்னால் முதல் தலைமுறை கணினி ஆசிரியர்களைக் கண்ட தலைமுறையும் 90களில் பிறந்தவர்கள்தான்.

* ஹாட்மெயில், ரெடிஃப் மெயில், யாஹூ மெயில் ஆகியவற்றில் மெயில் அனுப்பிய முதல்நாளே, வீட்டுக்கு வந்த தபால்காரரிடன் 'இன்னும் எத்தனை நாளைக்கு லெட்டர்லாம் அனுப்பிக்கிட்டு இருப்பாங்களோ?!' என அலுத்துக்கொண்டவர்கள்.

* Road Rash, Need for Speed (முதல் எடிஷன் ) போன்ற  கேம்களை விளையாடிவிட்டு, கோடை விடுமுறை நாட்களை தெருவில் கழிக்காமல், வீட்டிலுள்ளேயே கழித்த முதல் தலைமுறையினர்.

* கூகுளின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்த்தவர்கள். யூடியூபுக்கு முன்னர் 'கூகுள் வீடியோஸ்' என்று ஒன்று இருந்ததைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்கள்.
* ஆர்குட்டில் தன்னுடைய 'க்ரஷ்' தன் ப்ரொஃபைலைப் பார்த்தாளா?/பார்த்தானா? என்று தெரிந்துகொள்வதற்காகவே அக்கவுண்ட் வைத்திருந்தவர்கள்.

* ஃபேஸ்புக்கின் ஆரம்ப காலத்திலும், ஆர்குட்டைவிட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியே வராதவர்கள்.

* ட்விட்டரை இன்றும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாதவர்கள்.

* கூகுள் +, ஹிட்டாகாது என்று பயன்படுத்தாமலேயே சொல்பவர்கள்.
* இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் மூலம் டிவி சேனல்களைப் பார்த்து, 'நான்லாம் நெட்லயே டிவி பார்ப்பேனே!' என்று சொன்னவர்கள்.

* தன் பெயரில் வலைப்பூ ஆரம்பித்து, அதை இன்னொரு கணினியில் போட்டுப் பார்த்து பெருமிதம் அடைந்தவர்கள்.

மொத்தத்தில் 90களில் பிறந்தவர்கள். இன்றைய இணையத்தின் குழந்தைகள்!

90களில் பிறந்தவர்களும், டிவியும்

* 90களில் பிறந்தவர்கள்தான் ஊர்கூடி 'ஒளியும் ஒலியும்' பார்த்த கடைசி தலைமுறை.

* டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற அர்த்தமும் உண்டு என்பதை அறிந்தவர்கள்.

* இசைஞானியின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே அம்மா மடியில் தூங்கியவர்கள்

* 'ஒய் திஸ் கொலைவெறி'யைக் கேட்டுக்கொண்டே அம்மாவின் தூக்கத்தையும் கெடுத்தவர்கள்.

* ஞாயிற்றுக்கிழமைகளின் மதியங்களை டாம் அண்ட் ஜெர்ரியுடன் கழித்தவர்கள்

* பள்ளி முடிந்து வந்ததுடன் 4 மணிக்கு ஸ்வாட் கேட்ஸும் (Swat Cats), 5 மணிக்கு போக்கெமான் (Pokemon) பார்த்த பாக்கியவான்கள்.

* WWE-ஐப் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு குட்டிப் பயலை ஸ்டைலாக தூக்கிப்போட்டு ரவுடியான கடைசி தலைமுறை.

* பழைய விஜய் டிவியை பார்த்தவர்கள். Solidaire, Dynora டிவியைப் பயன்படுத்திய கடைசி தலைமுறையினர்.

* வீடியோ டேப்பாக இருக்கும் தன் பெற்றோரின் திருமண வீடியோவை சிடியாக மாற்றித் தந்தவர்கள்.

* குச்சி குச்சியாக இருக்கும் பழைய மாடல் ஆன்டெனாவை மொட்டை மாடியில் அட்ஜஸ்ட் செய்யத் தெரிந்த கடைசி மனிதர்கள்.

* டிவி ரிமோட்டை  முதலில் பயன்படுத்தியவர்கள்.

* காலியாக இருக்கும் பக்கத்து வீட்டின் கேபிள் கனெக்‌ஷனில் நம் டிவிக்கு திருட்டு கனெக்‌ஷன் கொடுத்து த்ரில் அனுபவித்தவர்கள்.

* ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியைப் பார்த்து வாய் பிளந்த இரண்டே வருடத்தில், சொந்த கிராமத்தில் இருக்கும் மாமாவுக்கு பிளாஸ்மா டிவிக்கும், LED டிவிக்கும் வித்தியாசம் சொல்லிக்கொடுக்கும் தலைமுறையினர்.

* டிவியில் இணைத்து விளையாடும் வீடியோ கேம் பாக்ஸை வாங்கித் தராவிட்டால் சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்த குழந்தைகள் இன்றைய தலைமுறையினர்

* அதே வீடியோ கேம் பாக்ஸின் கேட்ரிட்ஜ் வேலை செய்யாவிட்டால், அதில் வாயால் ஊதி திரும்ப பயன்படுத்தினால் வேலை செய்யும் என்ற சிதம்பர ரகசியத்தை அறிந்தவர்கள்.

* 'சிதம்பர ரகசியம்' தொடரை டிவியில் பார்த்துவிட்டு, நாடி ஜோசியத்தைப் பற்றி நண்பர்களிடம் பேசி மெய்சிலிர்த்தவர்கள்.

* 'மர்ம தேசம்' தொடரில் வரும் குதிரை சத்ததை கனவுகளில் கண்டு பயந்தவர்கள்.

* 'சின்ன பாப்பா, பெரிய பாப்பா' தொடரைப் பார்த்துதான் மாமியார் மருமகள் உறவையே புரிந்துகொண்டவர்கள்.

* நாலு ஸ்பீக்கர், ஒரு சப் வூஃபர் என்று இருக்கும் மியூசிக் சிஸ்டத்தை, ஹோம் தியேட்டர் ரேஞ்சுக்கு ஃபீல் செய்து, மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களை முழு வால்யூமில் ஓடவிட்டு, அதை ரசிப்பதுபோலவே நடித்து அந்த தெருவின் பீபியையே எகிறவிட்டவர்கள்.

* இடி இடித்தால் டிவியை ஆஃப் செய்யவேண்டும். இல்லாவிட்டால் பிக்சர் டியூப் போய்விடும் என்று பயந்தவர்கள்.

* நியூஸ் வருவதற்கு முன்பு, ஓடும் கவுன்ட் டவுன் டைமை வைத்து வாட்ச்சை செட் செய்தவர்கள்.

* சித்தி, மெட்டி ஓலி போன்ற சீரியல்களின் டைட்டில் மியூஸிக்கை எங்காவது கேட்க நேர்ந்தால் மெலிதாகப் புன்னகைப்பவர்கள்

* ஞாயிற்றுக்கிழமையானால் சக்திமான் பார்க்கவேண்டும் என்று 10 மணிக்கு முன், டிவி முன்னால் ஆஜரானவர்கள்.

* அதே சக்திமான் சீரியலுக்கு முன்னால், ராமாயணமும், மகாபாரதமும் ஓடும் என்றாலும் அப்போது டிவி பக்கமே எட்டிப்பார்க்காதவர்கள்.

* மியூஸிக் சானல்களுக்கு தன் பெயருடன் காதலியின் பெயரை SMS அனுப்பி, அதை டிவியில் பார்க்கும்போது உலகமே தன்னை ஆசிர்வதித்ததாக உணர்ந்த முதல் தலைமுறையினர்.

90களில் பிறந்தவர்களும், காதலும்

* இன்ஃபேச்சுவேஷன் (Infatuation) -ஐ காதல் என நினைத்துக்கொண்டு கற்பனையிலேயே குடும்பம் நடத்திய புண்ணியவான்கள்

* ஒரே காதல் ஜோடி, பேஜரில் இருந்து வாட்ஸ்அப் பயன்படுத்தி காதலித்துக்கொண்டே இருந்தால் அவர்களும் 90களில் பிறந்தவர்களே!

* மெரினா பீச்சில் இருந்து பீச் ஓரம் இருக்கும் KFC-க்கு இடம் மாறிய ஜோடியினர்.

* காதல் கடிதங்கள் அனுப்பிக் கொண்ட கடைசி தலைமுறையினர் (வரலாறு முக்கியம் அமைச்சரே!)

* ஃபோன் நம்பரை பகிர்ந்துகொள்வதன் மூலமும் காதலைத் துவக்க முடியும் என்ற முதல் தலைமுறையினர்.

* காதலர்களாக இருந்தாலும் பேருந்தில் கூட ஒன்றாக அமர்ந்து செல்ல தயங்கிய கடைசி தலைமுறையினர்.

* பைக்கில் கட்டிப்பிடித்துக்கொண்டு பறக்கும் முதல் தலைமுறை.

* காதல் தோல்வி என்றாலே தற்கொலை என்று நினைத்த கடைசி தலைமுறையினர்.

* காதல் தோல்வி என்றாலும், 'பிரேக்அப்' என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட்டு கடந்துசெல்லும் முதல் தலைமுறையினர்.

* 'நாங்கள் காதலிக்கிறோம்' என்பதை ' In a relationship ' என்று பட்டும்படாமல் சொல்லத் தெரிந்தவர்கள்.

* சாதி மூலம் காதல்கள் பிரிக்கப்படும் கடைசி தலைமுறை இவர்கள்.

* நட்பையும் காதலையும் குழப்பிக்கொள்ளும் கடைசி தலைமுறையாக இருந்தாலும், தேவைப்படும்போது காதலை நட்பாக மாற்றிக்கொள்ளும் முதல் தலைமுறையினர்.

மேலே உள்ள பாயின்ட்டுகளைப் படிக்கும்போது உங்களுக்கு உங்களையே பார்ப்பதுபோல் தோன்றினால், நீங்களும் 90களில் பிறந்த தலைமுறையினர்தான்! நானும் உங்கள் தலைமுறைதான்!

Followers

Comments Please...